வியாழன், 1 அக்டோபர், 2015

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்...

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....

மீனம் லக்னம் பற்றிய அடிப்படை :-
மீனம் உபய லக்னம்
மீனம் இரட்டை லக்னம்
மீனம் நீர் லக்னம்
மீனம் பெண் லக்னம்
மீனம் மோட்ச லக்னம்
மீனம் வடக்கு லக்னம்
மீனம் பிராமண லக்னம்

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னம் என்ற தலைவிதியை தீர்மானிக்கும் லக்னாதிபதி குரு பகவான் ஆவார் அவரே   பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும் அதிபதியும் ஆவார், குரு பகவானே 1,10 ஆகிய இரண்டு கேந்திரங்களுக்கும் அதிபதியாவதால் கேந்திரங்களில் 1,4,7,10 அமரும் போது கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு அதை இந்த வலைபதிவிலேயே எழுதி உள்ளேன், கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட்டால் தீமையான பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்தால் மட்டும் 70% நன்மையான பலன்களும் 30% தீமையான பலன்களையும் தரவல்லார், மற்றபடி 55% நன்மையான பலன்களையும் பிற்பாதியில் 45%  தீமையான பலன்களும் தரவல்லார். குரு பகவான் பாவர் அல்ல சுபர் தான் ஆனால் அதிகமாக இனிப்பை தந்து சக்கரை வியாதிக்கு இழுத்து செல்லுவதை போல தன்மை படைத்தவர்.

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் அதிபதி செவ்வாய் ஆவார் இவரை பொருத்தே குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சி, பொருளாதார ஸ்திர தன்மை காண முடியும் அவரே திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கு அதிபதியும் ஆவார் எனவே செவ்வாய் பகவான் மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மிக முக்கியமானவர் அதனால் இவர் யோகங்களை தரும் யோகர்.

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாம் வீடு  -  தைரிய ஸ்தானம், சகோதர ஸ்தானத்திற்கு அதிபதியும், மறைவு ஸ்தானமாம் என அழைக்கபடும் ஆயுள்  ஸ்தானம், மர்ம ஸ்தானம், துரதிர்ஷ்ட ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கு அதிபதியும் சுக்கிரன் ஆவார், பொருபாலான மறைவு ஸ்தான ஆதிபத்திய பெற்றதால் மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்ரன் 25% நன்மையான பலன்களும் 75% தீமையான பலன்களையும் தரும் பாவர்.

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் நான்காம் வீடு   -  சுக, வண்டி, வீடு  ஸ்தானம், ஏழாம் வீடு - வாழ்க்கைதுணை, களத்திர  ஸ்தானம், வணிக ஸ்தானத்திற்கும் அதிபதியுமானவர் புதன் பகவான் ஆவார் உபய லக்னமான மீனத்திற்க்கு 7ம் வீடும் பாதக ஸ்தானமாகும் அதுபோக 7 வீடு மாரக ஸ்தானம் ஆகும் எனவே இரண்டு தீய ஆதிபத்தியங்கள் பெறுவதால் 30% நன்மையான பலன்களும் 70% தீமையான பலன்களையும் தருவார் இருந்தாலும் சுகபோக காரகத்துவமும், வாழ்க்கைதுணைக்கான அமைப்பையும் செய்யும் பொறுப்பு உள்ளவர் அதனால் ஜாதகத்தில் மிகுந்த வலிமையும் அடையாமல் அதே நேரத்தில் பாதிப்பும் அடையாமல் சமமாக இருந்தால் நல்லது.

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாம் வீடு  -  பூர்வ புண்ணிய  ஸ்தானம், புத்திர ஸ்தானத்திற்கு அதிபதி சந்திரன் ஒற்றை ஆதிபத்திய தன்மை பெற்ற நிலையில் சந்திரனே பூர்வ புண்ணியங்களையும், பதவி உயர்வுகளையும் தருபவர் இருந்தாலும் வளர்பிறை சந்திரனானால் சுப தன்மை அதிகமாகவும், தேய்பிறை சந்திரனானால் அசுப தன்மை அதிகமாகவும் இருக்கும் தன்மை உள்ள கிரகம் என்பதால் வளர்பிறையில் பிறந்த மீன லக்னத்தாருக்கு 70% நன்மையான பலன்களும் 30% தீமையான பலன்களையும் தரவல்லார், தேய்பிறை சந்திரனானால் 55% நன்மையான பலன்களும் 45% தீமையான பலன்களையும் தரவல்லார்.

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மறைவு ஸ்தானமாம் என அழைக்கபடும் ஆறாம் வீடு  -  ரண ருண ரோக ஸ்தானம், சேவா ஸ்தானத்திற்கு அதிபதி சூரியன் ஒற்றை ஆதிபத்திய தன்மை பெற்ற நிலையில் சூரியனே தடை தாமதம் நோய்கள் தீர்மானிக்கும் முக்கிய காரகத்துவம் பெற்றவர் லக்னாதிபதி குருவுக்கு நட்பு கிரகம் எனவே 35% நன்மையான பலன்களையும் 65%  தீமையான பலன்களும் தரவல்லார்.

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பதினோராம் வீடு  -  லாப ஸ்தானம், சமூக ஸ்தானத்திற்கு அதிபதியும் சனி பகவானே ஆகும் அவரே பாதி மறைவு ஸ்தானமாம் பன்னிரண்டாம் வீடு  -  அயன சயன, நட்ட ஸ்தானம், மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதியும் சனி பகவானே இரு முரணான காரகத்துவங்களை ஒருங்கே கொண்டுள்ள சனி பகவான் மேலும் உபய லக்னத்திற்கு 7,11ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும் மாரக ஸ்தான ஆதிபத்தியமும் பெறுகிறார் அதாவது உடலை பெரிய அளவில் பாதிக்க கூடிய நோய்கள், கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தக் கூடியவரும் சனி பகவானே எனவே 45% நன்மையான பலன்களையும் 55%  தீமையான பலன்களும் தரவல்லார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக